நெல்லையில் சாதிய வன்மத்தால் தாக்கப்பட்டவர் 469 மார்க் பேனா பிடித்து எழுத முடியாத நிலையிலும் மாணவன் வெற்றி: ஆடிட்டராக விருப்பம்

நெல்லை: நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளியான இவருக்கு சின்னத்துரை (17) என்ற மகனும், 14 வயது மகளும் உள்ளனர். சின்னத்துரை வள்ளியூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இரவு இவர்களது வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் 3 பேர் சின்னத்துரையையும், அவரது சகோதரியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதுதொடர்பான நடத்தப்பட்ட விசாரணையில், சாதிய வன்மத்தால் சக மாணவர்களால் சின்னத்துரை தாக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த சின்னத்துரை பிளஸ் 2 காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.

இதையடுத்து சின்னத்துரைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நெல்லை திருமால் நகரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு பிளஸ் 2 படிப்பை தொடர்ந்தார். பிளஸ்2 பொதுத்தேர்வையும் ஆசிரியர் உதவியுடன் எழுதி முடித்து 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 71, ஆங்கிலத்தில் 93, பொருளாதாரத்தில் 42, வணிகவியலில் 84, கணக்குப் பதிவியலில் 85, கணிப்பொறி பயன்பாட்டில் 94 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து பிளஸ்2 பொதுத்தேர்வையும் ஆசிரியர் உதவியுடன் எழுதி கூறுகையில், ‘வள்ளூரில் தனியார் பள்ளியில் படித்த போது நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் குடும்பத்தோடு ரெட்டியார்பட்டிக்கு வந்து விட்டோம். அதன்பிறகு பாளையங்கோட்டை, சேவியர் பள்ளியில் பிளஸ் 2வில் கணினி பொருளாதாரம் படித்தேன். பொதுத்தேர்வில் 600க்கு 469 மார்க் எடுத்தது சந்தோஷமாக உள்ளது. நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக மதிப்பெண்கள் கிடைத்தது இரட்டிப்பு சந்தோஷம். அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனது படிப்புக்கு நிறைய உதவினர். என்னைப் பொறுத்தவரை நான் நன்றாக படிப்பவன்தான். அதனால்தான் என்னைச் சுற்றி நிறைய சம்பவங்கள் நடந்த போதும் நான் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தேன்.

பல மாணவர்கள் டியூசன் உள்ளிட்ட மாலை நேர வகுப்புகளுக்குச் செல்வார்கள். நான் அப்படி எந்த வகுப்பிற்கும் போகவில்லை. தினமும் இரவு வீட்டில் இருந்து படித்து வந்தேன். அதன் காரணமாக இந்த தேர்வில் 78 சதவீத மதிப்பெண்கள் கிடைத்தது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பேனா பிடித்து எழுத முடியாத நிலை இருந்தது. அதனால் தேர்வின் போது நான் சொல்ல சொல்ல எனக்காக ஒவ்வொரு பாடத்தேர்வுக்கும் ஒரு ஆசிரியர் தேர்வெழுதினர். அடுத்ததாக கல்லூரியில் பி.காம்., படிக்க ஆசைப்படுகிறேன். அதைத்தொடர்ந்து சிஏ படிப்பதுதான் எனது லட்சியம். ஆடிட்டராகி எளிய மாணவர்களுக்கு நானும் வழிகாட்டுவேன்’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

* நான் முதல்வன் திட்டத்தால் பயன் சேலம் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஐடி நிறுவனத்தில் வேலை
தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சேலம் மாவட்டத்தில் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் குகை மூங்கபாடி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 372 மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதினர். இதில் 360 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.87 ஆகும். தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பிரிசில்லா லிடியா சத்யா மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி சிவானிஸ்ரீ 569 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இம்மாணவி கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு (ஐடி நிறுவனம்) தேர்வாகியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலமாக இன்டெர்ன்சிப் பெறுவதோடு, உயர்கல்வியும் பயில உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த தோழி சிவானிஸ்ரீக்கு இனிப்பு ஊட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது குறித்து மாணவி சிவானிஸ்ரீ கூறுகையில், ‘‘நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று மிகப் பெரிய நிறுவனத்திற்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள க்யூட் தேர்வுக்கு தயாராக உள்ளேன். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஹெச்சிஎல் நிறுவனமே இன்டெர்ன்சிப் வழங்கி, உயர்கல்விக்கு பொறுப்பேற்று இருப்பதும் மகிழ்ச்சியை தருகிறது,’’ என்றார்.

* தந்தை இறந்த சோகத்திலும் அசத்தல்

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவர் கடந்த மார்ச் 15ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (16) கடலூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துள்ளார். தந்தை இறந்த அன்று இயற்பியல் பொதுத்தேர்வு நடைபெற்றது. மிகவும் துயரத்துடன் தேர்வு எழுதிவிட்டு தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். இவர் பிளஸ் 2 தேர்வில் 474 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயலு மகள் அனிதா (17). இவர் அருகிலுள்ள சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 1ம் தேதி தமிழ் தேர்வு எழுதிவிட்டு 5ம் தேதி ஆங்கிலம் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். அப்போது காலை 10 மணிக்கு தனது சைக்கிளில் மிளகாய் வியாபாரத்துக்கு சென்ற அவரது தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தந்தையின் உடல் வீட்டில் இருந்த போதிலும், துக்கத்தை தோளில் சுமந்து சென்று ஆங்கிலத்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வந்து தனது தந்தையின் உடலை கட்டி அணைத்து அழுதார்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் அனிதா 514 மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழில்-99, ஆங்கிலம்-63, வரலாறு-77, பொருளாதாரம்-91, வணிகவியல்-93, கணக்கு பதிவியல்-91 ஆகிய மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அனிதா கூறுகையில், ‘ எனது தந்தை இறந்து விட்டதால் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் இனி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். எனது படிப்பு, எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நான் சி.ஏ. படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்களுக்கு மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் அல்லது யாராவது உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

ராமநாதபுரம் அருகே காட்டூரணியை சேர்ந்தவர் மாணவி ஆர்த்தி(17). இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த மார்ச் 15 அன்று காலை மாணவி ஆர்த்திக்கு பொருளியல் தேர்வு நடக்க இருந்த நிலையில், அவரது தந்தை முனியசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை இறந்த சோகத்துடன் மனதைத் தேற்றிக் கொண்டு மாணவி இறுகிய மனதுடன் தேர்வு எழுதினார். பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். நேற்று பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவி ஆர்த்தி 600க்கு 487 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ்-85, ஆங்கிலம் -75, பொருளியல்-83, வணிகவியல் -87, கணக்கு பதிவியல் -83, கணினி அறிவியல் – 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை முனியசாமி இறந்த நாளன்று எழுதிய பொருளியல் தேர்வில் ஆர்த்தி 100க்கு 83 மதிப்பெண் பெற்று உள்ளார்.

மாணவி ஆர்த்தி கூறுகையில், “பொருளியல் தேர்வு நடைபெற்ற அன்று என்னுடைய தந்தை இறந்து விட்டார். இருப்பினும் தேர்வு எழுதச் சென்றேன். அதன்படியே தேர்வு முடிவும் நன்றாக வந்துள்ளது. சிஏ தணிக்கையியல் படிக்க வேண்டும் என்பது விருப்பம். அம்மா தெய்வக்கனி இல்லத்தரசி. பாத்ரூம் கூட இல்லாத ஆஸ்பெட்டாஸ் கொட்டகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். அப்பாவின் சம்பாத்தியத்தில் தான் படித்து வந்தேன். அப்பா இல்லாத நிலையில் மேற்கொண்டு எப்படி படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. மேற்படிப்பு படிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

இதேபோல், தந்தை இறந்த நாளில் பிளஸ்-2 தேர்வு எழுதிய கூடலூர் மாணவர் தருண் 500க்கு 358 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தந்தை இறந்த நாளில் அவர் எழுதிய கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 67 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

* விவசாயி மகள் 4 பாடங்களில் 100
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி தனியார் பள்ளி மாணவி தன்யஸ்ரீ 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இம்மாணவியின் தந்தை மகேஸ்வரன் விவசாயி. இவரது தாயார் பிரித்தா பிராண சிகிச்சையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ்-98, ஆங்கிலம்-96 மற்றும் இயற்பியல், வேதியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி தன்யஸ்ரீ கூறுகையில், “பள்ளியில் ஆசிரியர்கள், முதல்வர் எனக்கு அளித்த பயிற்சி மற்றும் ஊக்கம் அதிக மதிப்பெண் பெற உதவியது. அன்றாடம் பள்ளியில் நடத்தும் பாடத்தை வீட்டிற்கு வந்தவுடன் படித்து முடித்து விடுவேன். எனது இந்த வெற்றிக்கு எனது தாய் தந்தையர் பெரிதும் உதவியாக இருந்தனர். நான் கம்ப்யூட்டர் இன்ஜினியராக விரும்புகிறேன். மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களை விட்டு விலகி பாடங்களில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை அனைவரும் பெறலாம்’’ என்றார்.

* 373 மார்க் எடுத்த திருநங்கை
கோவை வட கோவையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்த அஜிதா என்ற திருநங்கை மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று 373 மதிப்பெண்கள் பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி. ஆசிரியர்கள், பெற்றோர், சக மாணவிகள் உதவியாக இருந்தார்கள். தொடர்ந்து பி.எஸ்சி. உளவியல் படிக்க உள்ளேன்’’ என்றார்.

* தந்தை உயிரிழப்பு, சுயநினைவற்ற தாய் 4 பாடங்களில் சதத்துடன் 573 மதிப்பெண்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி – ராதா தம்பதி. இவர்களது 2வது மகள் கோகிலா. தனது தந்தையை இழந்து, தாய் விபத்தில் பாதித்து சுய நினைவை இழந்தும் மனம் தளராமல் தனது சகோதரி, பெரியம்மாவின் பொருளாதார உதவியால் மிகவும் கஷ்டப்பட்டு பிளஸ் 2 படித்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் கணினி அறிவியல் என 4 பாடங்களில் சதம் அடித்து 600க்கு 573 மதிப்பெண்களை பெற்று கோகிலா சாதனை படைத்துள்ளார்.

தற்போது மதுரையில் தங்கியுள்ளார். மதுரையில் நேற்று மாணவி கோகிலா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளேன். 2012ம் ஆண்டு ஒரு விபத்தில் எனது தாய் ராதா சுயநினைவை இழந்து விட்டார். கடந்த 2019ல் தந்தையும் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார். எனது பெரியம்மா மாரியம்மாள், கணவர், குழந்தைகளுடன் மதுரை சோலையழகுபுரத்தில் தங்கி, முனிச்சாலையில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்க்கிறார். அதே மருத்துவமனையில் எனது சகோதரி சுகுமாரி செவிலியராக உள்ளார். அவர் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு, சுயநினைவிழந்த தாயுடன் கன்னியாகுமரியில் தங்கி படித்து வந்தேன்.

கன்னியாகுமரியில் தொடர்ந்து தங்க முடியாத நிலையில் தாயுடன் மதுரை பெரியம்மாள் வீட்டிற்கே வந்து விட்டோம். சகோதரி சுகுமாரி எனது படிப்பிற்காக, அவரது படிப்பை விட்டு விட்டு தற்போது வேலைக்கு சென்று வருகிறார்.
பொருளாதார உதவி எனக்கும், அக்காவிற்கும் கிடைத்தால் நிச்சயம் இருவரும் படிப்போம். வறுமையின் பிடியில் தவித்து, கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கும் எங்களின் கல்லூரி படிப்பை தொடர அரசு, தனியார் அமைப்புகள் உதவிட வேண்டும். பிகாம் படித்து வங்கி வேலைக்கு செல்லும் ஆசை இருக்கிறது’’ என்றார்.

The post நெல்லையில் சாதிய வன்மத்தால் தாக்கப்பட்டவர் 469 மார்க் பேனா பிடித்து எழுத முடியாத நிலையிலும் மாணவன் வெற்றி: ஆடிட்டராக விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: