வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம் தொழில் பாதுகாப்பு மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநாட்டில் தீர்மானம்

சென்னை: வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம் இயற்ற வேண்டும். கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 41வது வணிகர் தின விழாவை முன்னிட்டு வணிகர் பாதுகாப்பு மாநாடு கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துகுமார் தலைமை வகித்தார். பரப்பாடி ராதாகிருஷ்ணன், எஸ்.வி.கணேசன், தங்கராஜ், வெள்ளைச்சாமி நாடார், கமாலூதீன், சக்திவேல், வெள்ளத்துரை முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தஞ்சை மண்டலத்தை ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது போன்று, ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். சுய தொழில் செய்யக்கூடிய வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், விசேஷ சட்டம் இயற்றி கடைகளில் தகராறு செய்யக்கூடிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களை செய்து தர வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை நினைவில் கொண்டு, அவர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட அவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
அதேபோன்று, உள்ளாட்சிகளில் உரிமம் பெற்று வணிகம் நடத்தக்கூடிய சிறிய வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுதேசி வணிகர்களை காப்பாற்றிட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரி விதிக்க வேண்டும். உள்நாட்டு சுதேசி வணிகர்களுக்கு முழு அளவில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம் தொழில் பாதுகாப்பு மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: