கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில் தட்டுப்பாடின்றி குடிநீர்,மின்சாரம் விநியோகம்: 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கோடைக்காலத்தையொட்டி பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலத்தையொட்டி ஏரி, குளம், குட்டைகளில் இருந்த நீர் வறண்டு காணப்படுகிறது. அதேபோல், ஒரு சில பகுதிகளில் மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் மற்றும் தடையில்லாத மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் செந்தில்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 2 நாள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடில்லா குடிநீர் விநியோகம் குறித்து முதன்மையாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர்களிடம் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா கேட்டறிந்தார். அதேபோல், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், அதற்கா கால அவகாசம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக்கொள்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன.

அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் ‘கல்லூரி கனவு’ திட்டம் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசித்தார். இதுமட்டுமல்லாது, முதல்வரின் முகவரி துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், விழுப்புரம், மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

The post கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில் தட்டுப்பாடின்றி குடிநீர்,மின்சாரம் விநியோகம்: 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: