காலை உணவு திட்டத்துக்கு பிறகு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்வு: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாராட்டு

சென்னை: காலை உணவு திட்டத்திற்கு பின் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்சின் 206வது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை ஓட்டேரியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.

இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாவதற்கான அடிப்படை காரணம் ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள்தான். தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்பார்கள். ஆனால், மோடி தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகளை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு இடத்தில்கூட மறு பங்கீடு என்ற வார்த்தையோ, செல்வ வரி என்ற வார்த்தையோ கிடையாது. ஆனால், இதுகுறித்து மோடி தவறான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் உங்களிடம் இரண்டு வீடு இருந்தால் ஒரு வீட்டை எடுத்துக் கொள்வார்கள். இரண்டு மாடு இருந்தால் ஒரு மாட்டை எடுத்துக் கொள்வார்கள் என்று அபத்தமாக மோடி பேசுகிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து மோடி பேசி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. முன்பெல்லாம் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். தற்போது பாராட்டத்தக்க வகையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உள்ளது. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வந்த பின் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பெருமளவு அதிகரித்து வருகிறது.

The post காலை உணவு திட்டத்துக்கு பிறகு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்வு: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: