இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.8,063 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குநர் ஜெயின் தகவல்

சென்னை: இந்தியன் வங்கியின் 2023-24ம் நிதியாண்டின் நிதிசார் முடிவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது தலைமை நிர்வாக இயக்குநர் எஸ்.எல். ஜெயின் அளித்த பேட்டி: இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் உயர்ந்து ரூ.12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. நிகர லாபம் மார்ச் 2023ம் ஆண்டில் ரூ.5,282 கோடியாக இருந்தது, அது 53 சதவீதம் உயர்ந்து மார்ச் 2024ல் ரூ.8,063 கோடியாக உள்ளது. அதேபோல வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,915 கோடியிலிருந்து 85 சதவீதம் உயர்ந்து ரூ. 10,951 கோடியாக உள்ளது.

செயல்பாட்டுக்கான லாபம் ரூ. 15,271 கோடியிலிருந்து 10 சதவீதம் உயர்ந்து ரூ.16,840 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ 20,225 கோடியாக இருந்தது ரூ.23,274 கோடியாக அதிகரித்து உள்ளது. கடன்கள் மீதான வருவாய் 8.72 சதவீதமாகவும், முதலீடுகள் மீதான வருவாய் 6.80 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. வருவாய்க்கான செலவு விகிதம் 2024ம் நிதியாண்டுக்கு 45.92 சதவீதமாக இருக்கிறது. மேலும் இந்தியன் வங்கி 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் உட்பட உள்நாட்டில் 5,847 கிளைகளைக் கொண்டிருக்கிறது. இக்கிளைகளுள் 1,985 கிராமப்புறங்களிலும், 1,530 சிறு நகரங்களிலும், 1,174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1,158 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன.

டிஜிட்டல் வழியாக தொழில்கள் மேற்கொண்டதால் தற்போது ரூ. 81,250 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. இ-மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 45 சதவீதம் உயர்ந்து 1.67 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. யூ பி ஐ (UPI) பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 37 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக சேர்ந்துள்ள யூ பி ஐ – கியூ ஆர் (UPI – QR) வர்த்தகர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பி ஓ எஸ் முனையங்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 58 சதவீதம் அதிகரித்து 21,580 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.8,063 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குநர் ஜெயின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: