இன்று முதல் விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகளை உடனடியாக அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் பட்டியல்களை 9ம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தங்களின் பிறந்த தேதி, தேர்வுப் பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களும் அதேபோல மேற்கண்ட இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து தங்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அது தவிர, மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் 7ம் தேதி முதல் 11ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் என ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

அதனால் எது வேண்டும் என்று முடிவு செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு குறித்து பின்னர் விண்ணப்பிக்க முடியும். மதிப்பெண் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பாடத்துக்கு விடைத்தாள்களின் நகல்கள் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்துக்கு ரூ.275, மறுகூட்டல் செய்ய ஒரு பாடத்துக்கு ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணங்களை அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.

The post இன்று முதல் விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: