தொட்டியத்தில் சூறாவளி காற்றுடன் மழை; 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்

தொட்டியம்: தொட்டியம் பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்தும், 50 ஏக்கர் வெற்றிலை கொடிக்காலும் சாய்ந்து சேதமடைந்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமலும் விவசாயிகளும், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் தொட்டியம் பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கு மேலாக மழையுடன் காற்றும் தொடர்ந்தது. இதனால் தொட்டியம், காட்டுபுத்தூர், மஞ்சமேடு, நத்தம்ேமடு, கீழப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி, ராமசமுத்திரம் பகுதியில் சாகுபடி செய்திருந்த 1 லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தது. ெதாட்டியத்தை சேர்ந்த தமிழ்வாணன், வேல்முருகன், பழனிவேல், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் வயல்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் தொட்டியம் பகுதியில் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்காலும் முறிந்து விழுந்தது.

இந்த தகவல் அறிந்ததும் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை தோட்டங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் வயல்களில் முசிறி திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பார்வையிட்டார். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற்று தருமாறு எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரை தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வாழை, வெற்றிலை சாகுபடி செய்திருந்த நாங்கள், கோடை வெயிலின் தாக்கத்தால் எப்படி பயிர்களை காப்பாற்ற போகிறோம் என்று தவித்திருந்தோம். ஆனால் இதற்கு மாறாக சூறாவளி காற்றால் 1 லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தது. இதேபோல் வெற்றிலை கொடிக்காலும் சேதமடைந்தது. கடன் வாங்கி சாகுபடி செய்ேதாம். தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளதால் எப்படி கடனை அடைக்க போகிறோம் என்று தெரியாமல் கவலையில் உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தொட்டியத்தில் சூறாவளி காற்றுடன் மழை; 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: