மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலை: சீரமைக்க கோரிக்கை

 

திருவொற்றியூர், மே 6: மாதவரம் 200 அடி சாலை மஞ்சம்பாக்கம் சந்திப்பில் இருந்து, குறுக்கு சாலை வழியாக வடபெரும்பாக்கம், செங்குன்றத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மழை நீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் இந்த குறுக்கு சாலையை சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் விட்டு விட்டனர். இதனால் இந்த குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,

‘‘இந்த சாலையில் வெளியூர்களுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லக்கூடிய வாகனங்கள் பழுதடைந்துள்ள சாலையால் டயர் பஞ்சர் ஆகி நின்று விடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் இங்குள்ள சிக்னல் வேலை செய்யவில்லை. அதையும் சரி செய்து விபத்துகளை தடுக்கும் வகையில் சீரான போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: