துணை மின் நிலையத்தில் தீவிபத்து

 

சென்னை, மே 6: பட்டாபிராம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலமான மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசி, பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் தீப்பற்றி எரியும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 16 மெகா வாட் திறன் கொண்ட உயர்ழுத்த ட்ரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்தது. இதையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பூந்தமல்லி உள்ளிட்ட 5 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  தீவிபத்து காரணமாக, சுற்றுப்பகுதி குடியிருப்புகளை கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கக்கன்ஜி நகர், கோபாலபுரம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் முழுகியது. ஏற்கனவே வெப்பத்தின் காரணமாக வீட்டில் புழுக்கம் நிலவி வரும் சூழலில் இந்த தீ விபத்தின் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனிடையே, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, மின்சார துறை அமைச்சர் மற்றும் மின் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் வழங்கி இப்பகுதி மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட கேட்டுக்கொண்டார்.

The post துணை மின் நிலையத்தில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: