பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

கோவை: பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசிய யூடியூபர் சங்கரின் பேட்டி ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். யூடியூபர் சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும் போது பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பெண் எஸ்.ஐ ஒருவர் அளித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் ஓபிஎஸ் உறவினருக்கு சொந்தமான விடுதியில் இருந்தார்.

அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் கைது செய்யப்பட்ட பின் அவரது அறையில் சங்கர் கார் டிரைவரான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (27), உதவியாளரான பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (42) ஆகியோர் இருந்தனர்.

அந்த அறையில் பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அறையில் கஞ்சா நிரப்பிய சிகரெட்கள், உலோகத்தினாலான கூம்பு வடிவ சிகரெட் நிரப்பும் குழாய்கள், 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சங்கர், அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது கஞ்சா வழக்கு பதிய செய்யப்பட்டு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சங்கர் பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக இன்ஸ்பெக்டர் அருண் தெரிவித்து உள்ளார்.

சங்கர் மீது பதிவான அதே வழக்குப்பிரிவில் இரண்டாவது குற்றவாளியாக யூ டியூப் சேனல் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், சங்கர் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

The post பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: