காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகல்; பூரி தொகுதிக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு: ஒடிசா அரசியலில் பரபரப்பு

புவனேஸ்வர்: பூரி தொகுதியின் காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகியதால், புதியதாக மாற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவின் பூரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுசரிதா மொஹந்தி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென கட்சியிடமிருந்து போதிய பிரசார நிதி வரவில்லை எனக் கூறி தனது சீட்டை கட்சியிடமே திருப்பி ஒப்படைத்துள்ளார். தேர்தல் பிரசாரத்திற்கு தேவையான நிதியை கட்சியால் வழங்க இயலாதது குறித்த தனது கருத்தை, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கடிதமாக அனுப்பி உள்ளார்.

அதில், ‘கட்சி எனக்கு நிதி மறுத்ததால் பூரி மக்களவைத் தொகுதியில் பிரசாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் பிரசாரம் செய்யத் தேவையான நிதியை, தேசிய தலைமை வழங்குமாறு வலியுறுத்தினேன், ஆனால் பணம் ஏதும் வரவில்லை. அதனால், பூரியில் என்னால் தொடர்ந்து பிரசாரம் செய்ய முடியாது. தொடர்ந்து கட்சியின் விசுவாசியாக தொடர்வேன்’ என்று கூறியுள்ளார். சுசரிதா மொஹந்தியின் இந்த திடீர் முடிவால், பூரி தொகுதிக்கு புதியதாக ஜெய் நாராயண் பட்நாயக் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் நேற்றிரவு அறிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுசரிதா மொகந்திக்குப் பதிலாக ஜெய் நாராயண் பட்நாயக் போட்டியிடுவார்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே பூரி தொகுதியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவும், ஆளும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருப் பட்நாயக்கும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர் விலகல்; பூரி தொகுதிக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு: ஒடிசா அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: