மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு

மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான புள்ளி மான்கள், முயல்கள், நரிகள் உட்பட வன விலங்குகள் வசித்து வருகின்றன. வழக்கமாக கோடை காலத்தில் மலை மீது தண்ணீர் கிடைக்காமல் புள்ளி மான் மலையை விட்டு கீழே இறங்கி வருவது வழக்கம். இப்படி வரும் மான்களை வெறி நாய்கள் கடித்து குதறுவதும், வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகும். இதன்படி கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், வன விலங்குகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

எந்த பகுதிக்கு சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்பதை அறியாமல், அவை தவிக்கின்றன. இதையடுத்து மான்களை தேடி சென்று அதன் இடத்திலேயே தண்ணீர் கொடுப்பது என வெள்ளலூர் பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த வருடம் கட்டக்காளைபட்டி மற்றும் கூலிபட்டி வன பகுதியில் 10க்கும் மேற்பட்ட சிமெண்ட் தொட்டிகளை அமைத்து அதில் தண்ணீர் ஊற்றினர். இதே போல் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் வண்டியை ஏற்பாடு செய்து, வனப்பகுதிக்கு சென்று, சிமெண்ட் தொட்டியில் இளைஞர்கள் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். வெள்ளலூர் நாடு மக்கள் நலப்பேரவை என்ற அமைப்பின் சார்பில் இளைஞர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் பணியை கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

The post மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: