கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது

சென்னை: கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே நேற்று தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது. கத்திரி தொடங்கிய முதல் நாளான நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால், பொதுமக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர்.

முதல் நாளிலேயே 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110.30 டிகிரி வெயில் அடித்து நொறுக்கியது. ஈரோட்டில் 110.12, வேலூரில் 109.76, திருத்தணியில் 107.78, திருச்சியில் 107.78, தர்மபுரியில் 106.16, மதுரை விமானநிலையத்தில் 105.9, மதுரை நகரம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டையில் 105.8 டிகிரி, திருப்பத்தூரில் 105.44 டிகிரி பதிவானது. சேலத்தில் 104.72, சென்னை மீனம்பாக்கத்தில் 104.18, தஞ்சாவூரில் 104 , கடலூரில் 101.48 டிகிரி, கோயமுத்தூரில் 101.3 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது.

மேலும் காரைக்காலில் 103.64 டிகிரி, புதுச்சேரியில் 100.4 டிகிரியும் வெயில் பதிவானது. வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 10ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் 8ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்கள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9ம் தேதி மற்றும் 10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 8ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று முதல் 8ம் தேதி வரை தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2- 104 டிகிரி வெயிலும், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 96.8-100.4 டிகிரி வெப்பநிலை இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 102.2-104 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: