தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சேதம்; இடி தாக்கி மாடு பலி

சத்தியமங்கலம்: தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இடி தாக்கி பசு மாடு பலியானது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை, எரகனள்ளி கல்மண்டிபுரம், கரளவாடி, சிமிட்டஹள்ளி, மல்குத்திபுரம் தொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதோடு, இடியுடன் கூடிய மழை பெய்தது.

சூறாவளி காற்று காரணமாக காற்றின் வேகம் தாங்காமல் தாளவாடி மலை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தாளவாடி அருகே உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவண்ணா என்பவர் பசு மாட்டை தனது விவசாய தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது இடி தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த வருவாய் துறையினர் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் இடி தாக்கி பசு மாடு பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சேதம்; இடி தாக்கி மாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: