நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கரடி உலா: பொதுமக்கள் பீதி

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, காட்டுபன்றி, சிங்கவால் குருங்கு, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விகேபுரம், கோட்டைவிளைபட்டி, தெற்கு அகஸ்தியர்புரம், அனவன் குடியிருப்பு, சிவந்திபுரம் ஆகிய பகுதிகளில் தனது குட்டியுடன் சுற்றித் திரிந்த கரடி அவ்வப்போது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த 23ம்தேதி நள்ளிரவு விகேபுரம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே குட்டியுடன் கரடி சுற்றி திரிவதை சிலர் வீடியோ எடுத்தனர். மேலும் அதேநாளில் கட்டபொம்மன் காலனியில் கதிரவன் என்பவர் தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக குட்டியுடன் மாயமாகி இருந்த கரடி நேற்று அதிகாலை குட்டியுடன் மீண்டும் உலா வந்தது. கட்டபொம்மன் காலனியில் கதிரவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மீண்டும் குட்டியுடன் கரடி புகுந்தது. அப்போது அங்கிருந்த நாய், குரைத்து அதனை விரட்ட முயன்றது. ஆனால் நாயை கண்டுகொள்ளாத கரடி, சாகவசமாக அதன் குட்டியுடன் உலா வந்து அங்கிருந்து வெளியேறியது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. விகேபுரம் பகுதியில் மீண்டும் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கரடி உலா: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: