நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு.. தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு..!!

ஹைதராபாத்: நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கை தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சந்தேகங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த ரோஹித் வெமுலா கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து இது குறித்து விசாரிக்க நீதிபதி ரூபன்வாலா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கையை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவல்துறை ரோஹித் வெமுலா ஒரு தலித்தே அல்ல என்று கூறியுள்ளது. இந்த அறிக்கையின் காரணமாக வழக்கில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசாரின் அறிக்கைக்கு ரோஹித் வெமுலாவின் தாய் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தெலுங்கானா முதலமைச்சரின் உதவியை நாடி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தெலுங்கானா டி.ஜி.பி. இந்த அறிக்கை 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ரோஹித் வெமுலாவின் தாய் சந்தேகம் எழுப்பியுள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். தெலுங்கானாவில் இன்னும் 10 நாட்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரோஹித் வெமுலா வழக்கு அரசியல் சூட்டை மேலும் அதிகமாக்கி உள்ளது.

The post நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு.. தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: