நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சோழவரம் அடுத்த அலமாதி கிராமத்தில் குளோபல் வேஸ்ட் ரீசைக்கிளிங் நிறுவனம், பி.டி.என்டர்பிரைசஸ் நிறுவனம் என்ற இரு நிறுவனங்கள் கட்டியுள்ள குடோன்கள் தொடர்பாக இந்த நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.,) நோட்டீஸ் அனுப்பியது. அதில், சென்னை பெருநகர 2வது மாஸ்டர் பிளான் அடிப்படையில், அலமாதி, செங்குன்றம் உள்ளிட்ட 27 கிராமங்களில் உள்ள சுமார் 34 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த குடோன் கட்டப்பட்டுள்ளது என்று கூறி முதலில் குடோனுக்கு சீல் வைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், குடோனை இடித்து தள்ளுவதற்கான நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசிடம் இந்த 2 நிறுவனங்களும் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மீண்டும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்து நிவாரணம் பெற உத்தரவிட்டது.

அதன்படி கொடுக்கப்பட்ட மனுவை தமிழ்நாடு அரசு மீண்டும் நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அந்த 2 நிறுவனங்களும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. நகரமயமாதலினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஏற்கனவே நிபுணர்கள் குழு ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளது. இந்த குழு இறுதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யட்டும். அதன்பின்னர், அரசு தனது முடிவை மறுஆய்வு செய்யலாம்.

அதேநேரம், மனுதாரர்களின் கட்டுமானங்களுக்கு எதிராக மட்டுமே சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்பிடிப்பு பகுதி என்று கூறப்படும் 34 ஆயிரம் ஏக்கரி நிலப்பரப்பில் அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் கட்டிடங்கள் இருந்தும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது சி.எம்.டி.ஏ.வின் நடவடிக்கை பாரபட்சமானது.

34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நீர்பிடிப்பு பகுதி என்று அறிவித்த உத்தரவும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாடு அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நீர்பிடிப்பு பகுதி என்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளக் கூடாத பகுதி என்றும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அறிவிக்க உரிமை இல்லை. எனவே, மனுதாரர்கள் நிறுவனத்துக்கு எதிராக சி.எம்.டி.ஏ., அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: