பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு

சென்னை: மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன நம்பர் பிளேட்டில் பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்கள் ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் நேற்று பிடித்து அபராதம் விதித்தனர். பத்திரிகை அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்தலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் கடந்த வாரம் அறிக்ைக ஒன்று வெளியிட்டனர். அதில், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி (மின்வாரியம்), ஜிசிசி(சென்னை மாநகராட்சி), காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். இந்த ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வாகனத்திலும் காணப்படுகிறது.

இதுபோன்ற ஸ்டிக்கர்களை குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் தங்களது வாகனத்தில் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள். இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேநேரம், வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை நீக்க மே 1ம் தேதி வரை போக்குவரத்து போலீசார் கால அவகாசம் அளித்து இருந்தனர்.

இந்த கால அவகாசம் முடிந்த நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி நேற்று முதல் நம்பர் பிளேட்டில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கிய வாகனங்களை பிடித்து எச்சரித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த சோதனை சென்னை பெருநகர் எல்லையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர் சாலை, வடபழனி 100 அடி சாலை, அடையார் என 150க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 198-ன் கீழ் நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக நேற்று காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள், வாகனங்களில் ‘போலீஸ்’ என்று ஒட்டப்பட்ட வாகனங்களை வழிமறித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அடுத்த கட்டமாக அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. விதிகளை மீறி ஸ்டிக்கரை எடுக்காமல் இரண்டாவது முறையாக சிக்கினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

* பத்திரிகையாளர் அடையாள அட்டை இருந்தால் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டலாம்
பத்திரிகை துறையில் பணியாற்றும் நபர்கள், தங்களது நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் பிரஸ் ஸ்டிக்கர் தங்களது வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

The post பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: