தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை எல்லாம் ஒன்றிய பாஜ அரசு தூக்கி எறிந்துள்ளது என்று விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி குற்றம் சாட்டியள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

கேன்சர் போன்ற நோயால் அவதி பெறும் தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கும் அனுமதி அளித்துள்ளார். இறந்த தொழிலாளர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லக்கூடிய அனைத்து செலவையும் வாரியமே ஏற்கிறது. இவையெல்லாம் இந்த 2 ஆண்டு காலத்தில் வாரியத்தின் புதிய திட்டங்கள். ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவையும் 20, 25 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதற்காக தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை எல்லாம் தூக்கி எறிந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன நினைக்கிறதோ, என்ன கேட்கிறதோ அவர்களுக்கு சாதகமான சட்டங்களாக மாற்றி அமைத்து வருகிறது. விரைவில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடையாளப்படுத்துபவர் அடுத்து இந்தியாவின் பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்பார். அப்போது மாநில உரிமைகள் நிலை நாட்டப்படும். பறிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

The post தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: