சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும், என்று மேயர் பிரியா அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னையில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட் லிப்டிங் மெஷின் என அனைத்து உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதிகளும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் அமைய உள்ளது. இந்த உடற்பயிற்சி கூடங்களுக்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும், அவற்றை அமைப்பதற்கான தகுந்த இடங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநகராட்சியின் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெண்கள் சிலர் கூறுகையில், ‘‘குடும்பம், அலுவலகம், குழந்தைகள் என நேரத்தை செலவிடும் பெண்களுக்கு, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த உடற்பயிற்சி கூடம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தனியார் உடற்பயிற்சி கூடங்களில் சென்று விசாரித்தால், மாத கட்டணம் கிடையாது, ஒரு வருடத்திற்கு ரூ.20,000 செலுத்த வேண்டும், என்றார்கள். அதை காரணம் காட்டி பெண்களுக்கு இவ்வளவு செலவு செய்து எதற்கு உடற்பயிற்சி என்று வீட்டில் கேட்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு சார்பாக பெண்களுக்கு அமைக்கப்படும் இந்த இலவச உடற்பயிற்சி கூடங்கள் கண்டிப்பாக நல்ல முன்னெடுப்பு தான். பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறித்து யாரும் பேசுவது கூட இல்லை. அதுவும் பெண்களுக்கு முறையான உடற்பயிற்சி என்பதே ஆடம்பரம் என்று பலர் கருதுகின்றனர்.

குழந்தை பெற்ற பிறகு, பெண்களுக்கு மிக எளிதாக எடை அதிகரித்துவிடும். அவ்வாறு இருக்கும் போது, இந்த மனஅழுத்தமும் அதிகரித்து அவர்களை மனச்சோர்வுக்குள் தள்ளிவிடும், எனவே அதிலிருந்து வெளியே வர உடற்பயிற்சி கண்டிப்பாக ஒரு நல்ல வழி. எனவே, இந்த திட்டம் ஒரு நல்ல தொடக்கம். இதை விரைந்து செயல்படுத்த வேண்டும், என்றனர்.

The post சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: