சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம், என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இது, மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக உள்ளது. சென்னையில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.

இதன் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள் 2வது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்துவரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அரையாண்டுக்கு பிறகு செலுத்தப்படும் சொத்து வரிக்கு ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சதவீதம் தனிவட்டி அபராதமாக விதிக்கப்படும்.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகமாகும். நிலுவை வரியை வசூலிக்கும் விதமாக, நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாதோர் பட்டியல், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த ஏப்.1 முதல் 30ம் தேதி வரை ரூ.382 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம். கடந்த 30 நாட்களில் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் காலத்தோடு சொத்து வரியைச் செலுத்தி 5 சதவீத தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சொத்து வரி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இனிமேல் செலுத்தப்படும் சொத்து வரிக்கு தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது. செப்.30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதிப்பதுடன், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது.

இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் சில தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன,’’ என்றனர்.

* கடந்த 30 நாட்களில் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் காலத்தோடு சொத்து வரியைச் செலுத்தி 5 சதவீத தள்ளுபடியை பெற்றுள்ளனர்.

The post சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: