அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கரூரில் அதிகபட்சமாக 112 டிகிரியும், ஈரோட்டில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் பதிவானது. இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது, வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வெயில் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாத நிலையும் உள்ளது. காற்றில் வெப்பம் அதிகமாக இருப்பதால், ஆட்டோக்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திராவில் ராயலசீமா ஆகிய பகுதிகளில் நேற்று 111 முதல் 115 டிகிரிவரை வெயில் கடுமைகாட்டியது. இதேநிலை இன்றும் நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டது. இன்று கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இயல்பைவிட 7 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கரூரில் 112 டிகிரியும், ஈரோட்டில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணி, திருச்சி 109 டிகிரி, சேலம், தர்மபுரி 108 டிகிரி, திருப்பத்தூர், தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சென்னை 106 டிகிரி, கடலூர் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மொத்தமாக 17 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. இதற்கிடையே, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 7, 8ம் தேதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை தமிழக உள் மாவட்டங்களில் 6ம் தேதி வரை, இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் சமவெளிப்பகுதிகளில் ஒருசில இடங்களில் 111 டிகிரி வரை வெயில் இருக்கும். இதர மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெயில் இருக்கும். கடலோர மாவட்டங்களில் 104 டிகிரி வரை வெயில் இருக்கும். அத்துடன், வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசும், 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* 45 ஆண்டுகளுக்கு பிறகு…
தமிழ்நாட்டில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தே வருகிறது. இயல்பைவிட வெப்ப அளவு அதிகரித்தால் வெப்ப அலை வீசும் வாய்ப்பும் தொடங்கிவிடுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு ஒரே சீரான நிலையில் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கரூர் பரமத்தியில் இயல்பைவிட 7.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு கரூரில் நேற்று அதிக பட்சமாக 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: