புதுவை சிறுமி கொலையில் 500 பக்க குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 9 வயது சிறுமி கொலை வழக்கில் சுமார் 500 பக்க குற்றப்பத்திரிகையை போக்சோ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தாக்கல் செய்கின்றனர். இதனால் இவ்வழக்கில் விரைவில் நீதிமன்றம் தனது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2ம்தேதி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி படுகொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் கொலை வழக்குபதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென்பதால் அதற்கான நடவடிக்கையில் சிறப்பு விசாரணை குழுவும், முத்தியால்பேட்டை போலீசாரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு குற்றப் பத்திரிகையை போலீசார் தயாரித்து முடித்தனர். இவ்வழக்கு விசாரணையை டிஜிபி னிவாஸ் நேரடியாக கவனித்துவரும் நிலையில் சுமார் 500 பக்க விசாரணை அறிக்கை டிஜிபி மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

அதன்படி கடந்த இரு தினங்களாக திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை போலீசார் மேற்கொண்டனர். இது நிறைவடைந்துள்ள நிலையில் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சோபனா தேவியிடம் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை சூடுபிடிக்கும். இதனால் இவ்வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதுவை சிறுமி கொலையில் 500 பக்க குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: