திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை

அண்ணாநகர்: திருமங்கலத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வரும்பெண்ணை தாக்கி, அவரது தங்க நகைகளை பறித்து சென்ற தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியரை நேற்றிரவு சைதாப்பேட்டையில் போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்தனர்.

அண்ணாநகர் அருகே திருமங்கலம் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ணன் (37), அவரது மனைவி நிர்மலாதேவி ஆகிய இருவரும் தங்கியிருந்து காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையே, கடந்த மாதம் 4ம் தேதி நிர்மலாதேவி வீட்டுவாசலில் அமர்ந்து செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர், நிர்மலாதேவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, உணவு டெலிவரி ஊழியரும் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் நிர்மலாதேவியை உணவு டெலிவரி ஊழியர் சரமாரி தாக்கி, அவரது தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி காமிரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அந்த தனியார் நிறுவன ஊழியர் முதல் மாடிக்கு சென்று உணவு டெலிவரி செய்துவிட்டு கீழே வரும்போது காவலாளி வீட்டில் அவரது மனைவியை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் யார் என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது அலிகான் (22) எனத் தெரியவந்தது. மேலும், இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு சென்னை சைதாப்பேட்டையில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த உணவு டெலிவரி ஊழியர் முகமது அலிகானை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, தகுந்த வேலை கிடைக்காததால் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், திருமங்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பும்போது, அங்குள்ள காவலாளியின் மனைவி நிறைய நகைகளுடன் அமர்ந்திருப்பதை பார்த்தும், அவற்றை பறிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நகைகளை விற்பதன் மூலம் தனது குடும்ப வறுமையை நீக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக முகமது அலிகான் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பெண்ணை தாக்கி நகைகளை பறித்த முகமது அலிகானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் உங்களிடம் விலாசம் கேட்டால், அவற்றை தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல வேண்டும். செல்போனில் பேசியபடியே பெண்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். சந்தேக நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று எச்சரித்தனர்.

The post திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: