2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை : மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாகவும் தாம் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,”மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையிலோ அல்லது இண்டியா கூட்டணி கட்சிகளோ அறிவிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை. தேர்தல் பரப்புரைகளில் இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பேசி உளறி வருகிறார்.

அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்.சி. எஸ்.டி. பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை. இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா என்று மோடி வரலாறு தெரியாமல் கேட்கிறார்.காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியல், பழங்குடியினர் இடஒதுக்கீடு அமலானது என்ற வரலாற்றை மோடி மறந்துவிட்டார். 1951-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒ.பி.சி. பிரிவுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை மோடி மறந்துவிட்டார். ஒ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் என்ற வரலாறு மோடிக்கு தெரியவில்லை. 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தவறாக சித்தரித்து பிரதமர் மோடி பொய்யை பரப்பி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சாடியுள்ளார். மேலும் 50% இட ஒதுக்கீடு வரம்பு உயர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: