மானாமதுரை அருகே அழகாபுரி கண்மாயை தூர்வார வேண்டுகோள்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரி கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அலங்காரக்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தால் அழகாபுரி கண்மாயில் நிரம்பும் வகையிலும், அங்கிருந்து செட்டிகுளம் கண்மாய்க்கு சுப்பன்கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் வகையில் வரத்துகால்வாய்கள் இருந்தன.

இந்த கண்மாய் மூலம் அழகாபுரி, மாங்குளம், செட்டிகுளம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கண்மாய் முழுமையாக பராமரிப்பில்லாமல் போனதால் மடைகள் தூர்ந்து போயுள்ளன. கண்மாயில் தண்ணீர் திறந்து விடப்படும் மடையின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

கண்மாய் முழுவதும் கருவேலி மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. நீர்பிடிப்பு பகுதிகள் மேடாகி விட்டதால் மழைநீரையும் தேக்க வழியில்லாமல் உள்ளது. மேலும் கரைப்பகுதிகளில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் கரை வலுவில்லாமல் உள்ளது. கண்மாயின் பெரும்பகுதி தற்போது வீட்டுமனைகளாக மாறியுள்ளதுடன் சிலர் கால்நடைகள் கட்டும் இடமாகவும், வைக்கோல் போர், காங்கிரிட் கட்டுமான கழிவுகள், குப்பைகள் கொட்டிவைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விளைநிலங்கள் தரிசாக மாறிவருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் சிலர் நெல் விவசாயத்திற்கு பதில் மாற்று விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகள் நலன் கருதி, கண்மாயை தூர்வாரி, கருவேல மரங்களை முழுமையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

The post மானாமதுரை அருகே அழகாபுரி கண்மாயை தூர்வார வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: