ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்

ஆவடி: நகை கடையில் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.1.5 கோடி நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை சம்பவத்தில் உளவு பார்த்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(33). இவர், தனது வீட்டின் கீழ்த்தளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மதியம் பிரகாஷ் தனியாக வியாபாரத்தை கவனித்துள்ளார்.

அப்போது காரில் வந்த 4 பேர் அடங்கிய மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்தது. பின்னர் அவர்கள் நகைகளை பார்ப்பது போல் நடித்து, நகைக்கடை உரிமையாளர் தனியாக இருப்பதை அறிந்து, பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டி, கடையின் முன்பக்க ஷட்டரை இழுத்து மூடியுள்ளனர். பின்னர் அக்கும்பல் கடைக்குள் இருந்த சிசிடிவி காமிராக்களின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து உரிமையாளர் பிரகாஷை சரமாரி தாக்கிவிட்டு, ஷோகேசில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1.5 கோடி நகைகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளைடியத்துக்கொண்டு காரில் தப்பித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பலை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். முதல் கட்ட விசாரணையில், இந்த மர்ம கும்பலுக்கு அதே பகுதியில் தங்கியிருந்த 2 பேர் உளவு பார்த்து தகவல் சொன்னதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் புகைப்படங்களை வைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் நகைக் கொள்ளையில் மர்ம கும்பலுக்கு உளவு பார்த்து சொன்ன ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(24), சேட்னாராம்(24) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, பிடிபட்ட 2 பேர் அளித்த தகவலின் பேரில், நகைக் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த அசோக் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை ராஜஸ்தான் சென்று கைது செய்தனர். பிறகு அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு விரைந்தனர்.

The post ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: