வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்


சென்னை: வைபை மற்றும் பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி சென்னை முழுவதும் ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 64 ஏடிஎம் கார்டுகள், 2 ஸ்வைப்பிங் இயந்திரம், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சூளைமேடு வன்னியர் தெருவை ேசர்ந்தவர் கார்த்திக் வேந்தன்(32). இவர் தனது தனியார் வங்கி ஏடிஎம் கார்டை கடந்த மார்ச் 31ம் தேதி தொலைத்துவிட்டார். ஆனால், அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 3 முறை ரூ.11,870 எடுக்கப்பட்டதாக கார்த்திக் வேந்தனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதுகுறித்து உடனே சூளைமேடு போலீசில் கார்த்திக் வேந்தன் புகார் அளித்தார். அதன்படி உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் மையத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் அடிக்கடி சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது, ஆந்திர மாநிலம் குச்சிப்புடி, மரிபாடு மண்டலம் பகுதியை சேர்ந்த சீனிவாசலு ரெட்டி(27) என தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஏடிஎம் மையத்திற்கு வைபை மற்றும் பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் நபர்களிடம் ஏடிஎம் கார்டுகளை திருடி, தனது ஸ்வைப்பிங் இயந்திரத்தில் பயன்படுத்தி, தனது பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி நூதன மோசடி செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் ஏடிஎம் கார்டு மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த சீனிவாசலு ரெட்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 2 ஸ்வைப்பிங் இயந்திரம், 64 ஏடிஎம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: