நீர்மட்டம் 23 அடியாக சரிவு மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை

உடுமலை : திருமூர்த்தி அணை நீர்மட்டம் 23 அடியாக சரிந்துள்ள நிலையில் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகரம் உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.பிஏபி பாசனத்தில் நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து, பொள்ளாச்சி சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

இதுதவிர, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவி, பாலாறு வழியாகவும் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மழை இல்லை. இதனால் பாலாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. அணையில் நேற்று நீர்மட்டம் 23.25 அடியாக இருந்தது. பாலாறு வழியாக 51 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காகவும், தளி வாய்க்காலிலும் மொத்தம் 140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த 2022-ல் இதே காலகட்டத்தில் அணையில் 43 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இப்போதுள்ள நீர்மட்டத்தில் பாதிக்கும் மேல் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே நீரை பயன்படுத்த முடியும். பாசனத்துக்கு தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அணை நீர்மட்டம் குறைந்ததால், பெரும்பகுதி மணல்மேடாக காட்சி அளிக்கிறது. அதில் வளர்ந்துள்ள புற்களை தீவனமாக பயன்படுத்துவதற்காக, ஆடு வளர்ப்போர் ஆட்டு மந்தைகளை திருமூர்த்தி அணையில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இனி, ஜூனில் தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாலும், திருமூர்த்தி மலையில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதாலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும் என, உடுமலை நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்துக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மோட்டார் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post நீர்மட்டம் 23 அடியாக சரிவு மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை appeared first on Dinakaran.

Related Stories: