முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் எம்எல்ஏவாக உள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு கடந்த ஏப்1ம் தேதி விசாரித்தது.

செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதற்கு ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதில் வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துவிட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, பணமோசடி வழக்கில் ஜாமின் கோரும் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை. ஜாமீன் கோரிய வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. அமலாக்கத்துறை வேண்டுமென்றே விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: