குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே நடுக்கடலில் கண்ணாடி கூண்டு பாலத்துக்கு ஆர்ச் தயாராகிறது: விரைவில் பொருத்தப்படும்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலத்துக்கான ஆர்ச், புதுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட பூம்புகார் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகு சேவை உள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு தளம் ஆழம் அதிகமான பகுதியில் உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலைக்கான படகு தளம் ஆழம் குறைவானதாகவும் அதிகப்படியான பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளதால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் வருடத்தில் பாதி நாட்கள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதியாக ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ச் பீம்கள், குறுக்கே அமைக்கப்படும் பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் பாண்டிச்சேரியில் தனியார் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டன. இந்த கட்டமைத்தல் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இருபுறமும் அமைந்திருக்கும் தூண்கள் மீது இந்த ஆர்ச்கள் பொருத்தப்படும். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் குழுவினர் பாண்டிச்சேரி சென்றனர். அவர்களிடம் ஆர்ச் வடிமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை இணைத்து பரிசோதனை செய்து காண்பித்தனர். இந்த ஆர்ச் எடை 222 டன். துருப்பிடிக்காத வகையில் ஸ்டீல்ஸ் கம்பிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 துண்டுகளாக இவை தயாரிக்கப்பட்டு இணைத்து காண்பிக்கப்பட்டது. பின்னர் இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முடிந்ததும் கன்னியாகுமரிக்கு வந்து சேரும். பின்னர் தொழில்நுட்ப வல்லுநர் குழு முன்னிலையில் இந்த 101 துண்டுகளும் இணைக்கப்பட்டு ஆர்ச் அமைக்கப்படும். ஜூன் மாதத்துக்குள் ஆர்ச் பணிகள் முடிந்து விடும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே நடுக்கடலில் கண்ணாடி கூண்டு பாலத்துக்கு ஆர்ச் தயாராகிறது: விரைவில் பொருத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: