அப்பப்பா…அனல் காத்து வீசுது தகதகக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து உணவுகள்

*டாக்டர்கள் ‘அட்வைஸ்’

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் நீர்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். திண்டுக்கல்லில் தற்போது இளநீர், தர்பூசணி, நுங்கு போன்ற பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

இதுகுறித்து திண்டுக்கல் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது: வெயிலுக்கேற்றார் போல் பொதுமக்கள் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.வெயிலில் சிறுவர்கள், முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம். வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர் போக்கு அதிகமாக வெளியேறும். இதனால் உடல் சோர்வு ஏற்படும்.

மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கு அம்மை, சளி, தொண்டையில் கட்டி போன்ற நோய்களும், முதியோர்களுக்கு பல்வேறு சர்ம நோய்களும் வர வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க நீர் மற்றும் சோர்வை தடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. கோடை காலத்தில் வெளியில் செல்பவர்கள் குடிநீர் பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு அதிகளவு குடிநீர் குடிக்க வைக்க வேண்டும், சிறுவர்கள் விளையாட செல்லும் போது அடிக்கடி தாகம் ஏற்படும், அப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அப்போது தான் உடல்நிலை சீராக இருக்கும். மேலும் இயற்கையாக கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற நீர்ச் சத்துள்ள பொருட்களை வாங்கி பருக வேண்டும். மேலும் வெள்ளரிக்காய் பிஞ்சுகளை வாங்கி அதிக அளவு சாப்பிட வேண்டும்.

நார்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கள் சாப்பிடலாம். மேலும்‌ உணவில் தயிர், மோர் சேர்த்துக் கொள்வது நல்லது.வெயில் நேரங்களில் டீ மற்றும் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது நல்லது என தெரிவித்தார்.

தோலில் வறட்சி , முகத்தில் கருமை இதுகுறித்து பியூட்டிசியன்கள் கூறுகையில், ‘‘காலநேரம் பார்க்காமல் எல்லா நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. வியர்வை அதிகமாக சுரப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. வெளியே சென்று விட்டு உள்ளே வந்ததும் , சற்று வியர்வை அடங்கிய பிறகு வியர்வை நனைந்த பாகங்களை கழுவினால் அரிப்பில் இருந்து தப்பிக்கலாம். வியர்வைக்குரு, தடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம். உக்கிரமான வெயிலால் தோலில் வறட்சி , முகத்தில் கருமை தோன்றும். கை, கால்களில் எண்ணெய் தேய்க்கலாம். அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். குளிக்கும்போது கடலை மாவு, பாசிப்பயிறு பயன்படுத்தலாம். முகத்திற்கு மஞ்சள் பூசலாம். வெயில் காலங்களில் பொடுகு , முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதனால் தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செம்பருத்தி , மருதாணி தேய்த்து குளித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.’’ என்றனர்.

உடம்பு ஜில்லுனு இருக்க இதை சாப்பிடுங்க…!

தயிர்: கோடை காலத்தில் மக்கள் உணவில் அதிகளவில் தயிரை சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடம்பிற்கு நல்ல் குளிர்ச்சியை தரும். இதில் புரதங்கள் அதிகளில் உள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட தடைகளை சரிசெய்கிறது. தயிர் ஒரு புரோபயாடிக் உணவு என்பதால் குடல் வாழ் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது.

இளநீர்: இளநீர் ஒரு இயற்கையாகவே ஆற்றலை தரும் பானமாகும். கோடை கால வெயிலில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே இருக்கும் இளநீர்களை வாங்கி அருந்துவது மிகவும் அவசியமாகும். இதிலுள்ள இயற்கை சர்க்கரை, சோடியம் மற்றும் பொட்டாசியம் உடம்பிற்கு ஆற்றலையும், குளிர்ச்சியையும் தருகிறது. உடம்பில் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள சைட்டோகின் மற்றும் லாரிக் அமிலம் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கிறது.

தர்பூசணி: கொளுத்தும் வெயிலிற்கு ஏற்ற உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தர்பூசணி மட்டும் தான். இதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் சத்து கோடை கால தாக்கத்தை போக்குகிறது. அதிகமாக வியர்க்கும் போது நமது உடலில் உப்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதனால் ஏற்படும் சோடியம் மற்றும் பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரி ஆக்குகிறது.உடல் வெப்பத்தை குறைத்து ஆற்றலை தர சிறந்த பழவகைகளில் இதுவும் ஒன்று.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் கோடையை தணிக்கும் நீர்ச்சத்து, நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி போன்றவை காணப்படுகிறது. எனவே மனஅழுத்தம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் வயிறு சூட்டை தணித்து அசிட்டிட்டி பிரச்சனையை குறைக்கிறது.

வெங்காயம், சப்ஜா விதைகள்: வெங்காயத்தில் இயற்கையாகவே உடம்பை குளிர்ச்சியாக்கும் பொருட்கள் உள்ளன. எனவே வெங்காயத்தை உணவில் சேர்ப்பது வெயிலுக்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. அதேபோல் சப்ஜா விதைகள் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதில் நார்சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பது பசியை கட்டுப்படுத்தவும், உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

The post அப்பப்பா…அனல் காத்து வீசுது தகதகக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து உணவுகள் appeared first on Dinakaran.

Related Stories: