ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சீரமைப்பு: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பதிவுத்துறையில் உள்ள 56 பதிவு மாவட்டங்களில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடைபெறுகிறது.

விசேஷ நாட்களில் கூடுதலாக டோக்கன் வழங்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான ஆவணப்பதிவு நடைபெறுவதால் குறித்த நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் உள்ளது. சில இடங்களில் குறைவான பதிவுகள் நடைபெறுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில் சார்பதிவாளார் அலுவலகங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களும் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களையும் ஆய்வு செய்து, மிக அதிகமாக ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து அவ்வலுவலகத்தில் உள்ள கிராமங்களை பிரித்து அருகிலுள்ள சார்பதிவகத்துடன் இணைப்பது, புதிய அலுவலகங்கள் தோற்றுவிப்பது குறித்து பரிசீலனை செய்தும்,குறைந்த பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகங்களை அருகில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுடன் இணைப்பது குறித்து பரிசீலனை செய்தும் கீழ்க்கண்ட விவரங்களை அனுப்ப வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட்ட நாள், சார்பதிவாளர் அலுவலகத்தில் அமையப்பெறும் கிராமங்களின் விவரம், கிராமங்கள் எந்த வருவாய் வட்டம், வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்டது என்ற விவரம், கிராமம் வாரியாக கடந்த 3 நிதி ஆண்டுகளில் (2021-22, 2022-23, 2023-24) பதிவுற்ற ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் 3 ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கை. கிராமம் வாரியாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்ட சராசரி வருவாய் கிராமங்களுக்கும் அவை அமைந்துள்ள சார்பதிவகத்திற்கும் இடையே உள்ள தூரம்.

குறைந்த ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களை அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கும் நேர்வில், அச்சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்கும், இணைக்கப்படவுள்ள சார்பதிவகத்திற்கும் இடையே உள்ள தூரம்.
குறைந்த ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களை அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கும் நேர்வில், அங்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய்.

புதிய சார்பதிவாளர் அலுவலகம் தோற்றுவிக்க தேவை எழும் நேர்வில் அது அமைவிடத்திற்கும், கிராமங்களுக்கும் இடையே உள்ள தூரம்.  புதிய சார்பதிவாளர் அலுவலகம் தோற்றுவிக்கும் நேர்வில் பிரிக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவகம் பிரிக்கப்பட்ட பின்னர் பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை விவரம். புதிய சார்பதிவாளர் அலுவலகம் தோற்றுவிக்க தேவை எழும் நேர்வில், புதிதாக தோற்றுவிக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை/வருவாய்.

அச்சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தேவையான பணி அமைப்பு விவரம். தேவையான தொடரும் மற்றும் தொடரா செலவினம் குறித்த விவரங்கள். மேற்கண்ட விவரங்களுடன் வரும் 29ம் தேதிக்குள் முழுமையான அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சீரமைப்பு: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: