தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் பழமையான கண்ணகி கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை 6 மணியிலிருந்தே தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாகவும், கேரள வனப்பகுதியான குமுளி கொக்கரக்கண்டம் வழியாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும், கேரள வனப்பகுதி வழியாக ஜீப்களிலும் மலை உச்சியிலுள்ள கோயிலுக்கு சென்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் இருப்பதால், பக்தர்களுக்கு இருமாநில அரசுகள் சார்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பளியங்குடியில் தமிழக போலீஸ் மற்றும் வனத்துறையினர் சோதனை செய்து பக்தர்களை அனுப்பினர்.

கோயிலில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகளும், காலை 10 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பூஜித்த மங்கலநாண், வளையலை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 வரை மணிமேகலையின் அமுதசுரபியில் (அட்சய பாத்திரத்தில்) உணவு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணிவரை இசைவிருந்து (நாட்டுப்புற பாடல்), அவல் சிறப்புணவு வழங்கல், திருவிளக்கு வழிபாடு, மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை நடைபெற்ற பூமாரி விழாவோடு சித்திரை முழு நிலவு விழா நிறைவு பெற்றது. அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கண்ணகி அறக்கட்டளை சார்பாக கோயிலுக்கு வந்த மகளிர் குழுவினரும், தமிழக வருவாய்த்துறையினர், கேரள பெண் பக்தர்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தேனி மாவட்ட நிர்வாகம், மற்றும் கண்ணகி அறக்கட்டளையினர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பளியன்குடி வழியாக கோவிலுக்கு சென்றவர்களுக்கு தமிழக அறநிலையத்துறை சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

The post தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: