நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு

நெல்லை: அம்பை சரக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி.,பல்வீர் சிங் உட்பட 4 போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் 8ம் கட்ட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சப்-டிவிஷனிலுள்ள வி.கே.புரம், அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தது தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய ஏ.எஸ்.பி.,பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, ஏ.எஸ்.பி.,பல்வீர்சிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி உட்பட 3 பேர், எஸ்ஐக்கள் முருகேசன் உட்பட 2 பேர், ஐந்து போலீஸ் ஏட்டுக்கள், மூன்று காவலர்கள் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக ஏ.எஸ்.பி.,பல்வீர்சிங்கை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதில் தொடர்புள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் ஆகியோர் வெளி மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்தாண்டு டிச.15ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் நடந்தது. இதில் முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஏ.எஸ்.பி.,பல்வீர்சிங் உட்பட 14 பேர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவ்வழக்கு தொடர்பாக 7 முறையாக (கட்டங்களாக) வாய்தா போடப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதனையடுத்து நேற்று 8வது முறையாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மற்றும் போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில் நேற்று நெல்லை ஜேஎம் ஒன்றாவது நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஏ.எஸ்.பி.,பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்ஐ முருகேசன் மற்றும் ஏட்டு சுப்பிரமணியன் உட்பட 4 பேரை தவிர மீதமுள்ள 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி திரிவேணி, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (மே மாதம்) 29ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: