‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு பிடிக்கணும்’ ; கட்டுப்பாட்டு அறையை கலங்கடித்த வாக்காளர்

ஈரோடு: கள்ளஓட்டு போட்ட நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஈரோடு தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வாக்காளர் ஒருவர் தொடர்ச்சியாக போன் செய்து கலங்கடித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. ‘டோல் பிரி’ எண் மூலமும், ‘சிவிஜில்’ ஆப் மூலமும் வரும் புகார்களின் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று வரை சிவிஜில் ஆப் மூலம் 78 புகார்களும், கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு 170 புகார்களும் என மொத்தம் 248 புகார்கள் பதிவாகி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் ஆகிய 2 நாட்களில் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து ஒரு நபர் தொடர்ச்சியாக போன் செய்துள்ளார். அதில் தன்னுடைய ஓட்டை வேறு யாரோ ஒருவர் செலுத்திவிட்டதாகவும், கள்ளஓட்டு போட்ட அந்த நபரை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டு அவர் தொடர்ச்சியாக போன் செய்துள்ளார்.

‘‘உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பதிலளித்தும் அந்தநபர் தொடர்ந்து போன் செய்து ஊழியர்களை கலங்கடித்துள்ளார். இறுதியாக இந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அந்தநபர் போன் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

The post ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு பிடிக்கணும்’ ; கட்டுப்பாட்டு அறையை கலங்கடித்த வாக்காளர் appeared first on Dinakaran.

Related Stories: