‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’; திருவள்ளூர் – திருநின்றவூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரம்

திருவள்ளூர்: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம் திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகில் இருந்து திருநின்றவூர் வரை மீதம் உள்ள பணிகள் கடந்த 2022ம் ஆண்டு ரூ.364 கோடியில் துவங்கியது. இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகில் இருந்து பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் வழியாக செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு மற்றும் திருநின்றவூர் வரையில் சாலை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம், 17.5 கிலோ மீட்டர் துாரம் அமைய உள்ள இச்சாலையில் 7 இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், பெரும்பாக்கம், தண்ணீர்குளம், காக்களூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது, தண்ணீர் வடிந்துள்ள நிலையில், மீண்டும் நெடுஞ்சாலை பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் இடங்களில் மட்டும் தூண்கள் அமைத்து, ‘கர்டர்’ இணைக்கும் பணி நடக்கிறது. மீதம் உள்ள பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 5 மாதங்களில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

The post ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’; திருவள்ளூர் – திருநின்றவூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: