திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

*உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.திருப்பத்தூர் கலெக்டர் அறிவுரைப்படியும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.செந்தில் குமார் ஆலோசனை படியும் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பேக்கரி, இனிப்பகங்கள் மற்றும் குளிர்பான கடைகளில் திருப்பத்தூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மொத்தம் 16 கடைகளில் ஆய்வு செய்தார். இவற்றில் உணவு பாதுகாப்பு பதிவு சான்று புதுப்பிக்காத ஒரு கடைக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 விதி 31 கீழ் நோட்டீஸ் வழங்கினார்.

மேலும், இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் சுமார் 15 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இரண்டு கடைகளில் தடைசெய்யப்பட்ட 150 பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்கள் தயாரிக்கும் கடைகளுக்கு ப்ரூட் மிக்ஸர் பாதாம் கீர் ஆகியவற்றில் எந்த கலர் பவுடர் போடக்கூடாது எனவும், தினந்தோறும் தயாரித்து அன்றைய தினமே விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும் அனைத்து குளிர்பான பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி காலாவதியான தேதி குறிப்பிட்டு இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

The post திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: