பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்

டெல்லி: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கடும் கணடனத்தை பதிவு செய்தது. மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை தடுக்கக் கோரி பிரதமர் மோடி மீது தொடரப்பட்ட வழக்குகள், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. மோடியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். அவர், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஊடுருவியவர்கள் என்ற வார்த்தையை இஸ்லாமியர்கள் மீது பயன்படுத்தியுள்ளார். இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் appeared first on Dinakaran.

Related Stories: