ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி வலை, கூழாங்கற்களை கொண்டு விலங்குகள் வடிவம் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி வலையால் ஆன வடிவத்தில் கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவம் அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த சமயத்தில் கோடை விடுமுறையை கொண்டாடவும்,சமவெளி பகுதிகளில் நிலவும் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள்.

அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம்,தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுகிறது. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வதில்லை. கோடைசீசனின் போது இப்பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சி புகழ்பெற்றதாகும். இக்கண்காட்சியை காண மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.மலர் கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் வண்ணம் லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு வகையான அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.இதற்கேற்ப சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பதால் இதமான காலநிலை நிலவும் ஊட்டிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.கல் மரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கேபியன் கேஜ் எனப்படும் கம்பி வலை கொண்டு வன விலங்குகளின் உருவங்களை செய்து அதில் கூழாங்கற்கள் மற்றும் இதர சிறு கற்களை நிரப்பி காட்சிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பல்வேறு வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. இந்த ஏற்பாடு கோடை சீசனின் போது வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெரும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறுகையில்: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் யானை,புலி,வரையாடு,மான்,காட்டுமாடு ஆகியவற்றின் வடிவங்கள் கம்பி வலை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் உட்புறம் கூழாங்கற்கள் மற்றும் இதர ஜல்லி கற்கள் கொண்டு நிரப்பி காட்சிபடுத்தப்பட உள்ளது. இப்பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் ஒரிரு நாட்களில் முடிக்கப்படும். தொடர்ந்து அந்த வனவிலங்குகளை சுற்றிலும் மலர் செடிகள் வைத்து அலங்கரிக்கப்படும், என்றார்.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி வலை, கூழாங்கற்களை கொண்டு விலங்குகள் வடிவம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: