காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.. மற்ற வேட்பாளர்கள் வாபஸ்… சூரத் தொகுதியில் போட்டியின்றி தேர்வாகிறார் பாஜக வேட்பாளர்!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்பட்டது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி-யை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், நிலீஷ் கும்பானியின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவுக்கும் இதே 3 பேர் தான் வேட்புமனுவில் முன்மொழித்தனர்.இதையடுத்து, சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இந்த நிலையில், மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 8 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியில் இருந்த மற்ற வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகிறார். இதனிடையே போட்டியின்றி சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 8 வேட்பாளர்களின் மனுக்களை திட்டமிட்டு பாஜக வாபஸ் பெறச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் கூறியுள்ளது. இதனிடையே சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானிக்கு முன்மொழிந்தவர்கள் திடீர் மாயம் ஆகி உள்ளனர். காங். வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களை பாஜகவினர் கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

The post காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.. மற்ற வேட்பாளர்கள் வாபஸ்… சூரத் தொகுதியில் போட்டியின்றி தேர்வாகிறார் பாஜக வேட்பாளர்!! appeared first on Dinakaran.

Related Stories: