நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை : சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வாக்களிக்க சுணக்கம் காட்டியது வாக்கு சதவீதம் குறைய காரணம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் சராசரியாக 69.46% மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த 2019 பொதுத் தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல்வேறு காரணங்ளும் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசியுள்ள அவர், “நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற நகர்ப்புற மக்களின் எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணமாகும். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வாக்களிக்க சுணக்கம் காட்டி உள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலைவிட தற்போது 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது. தூத்துக்குடி தொகுதியில் 59.96% வாக்குப் பதிவு; கடந்த தேர்தலை விட 10% வாக்குப்பதிவு சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் 2009, 2014, 2019 தேர்தல்களை விட 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் சரிந்தது. தேனி, சிவகங்கை தொகுதிகளில் கடந்த தேர்தலைவிட 6% குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலைவிட சராசரியாக 4% வாக்குகள் குறைந்துள்ளன.

கடந்த தேர்தலில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளில் சராசரி வாக்குப்பதிவு 60.07%ஆக இருந்தது. தற்போதைய தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் சராசரியாக 56.10% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. நாகை 71.55%, திருப்பூர் 70.58%, திருவள்ளூர் 68.31%, தேனி 69.87%, மயிலாடுதுறை 70.06%, ஈரோடு 70.54% வாக்குப்பதிவு நடந்துள்ளது. காஞ்சிபுரம் 71.55%, கிருஷ்ணகிரி 71.31%,கடலூர் 72.28%, விருதுநகர் 70.17%, பொள்ளாச்சியில் 70.70% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெயில் கடுமையாக இருந்தது உள்ளிட்டவை காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: