சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து

*கட்டிடம் தரைமட்டம்; பெண் படுகாயம்

சிவகாசி : சிவகாசியில் நேற்று காலை பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி செய்யும் குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் தரை மட்டமானது. பெண் படுகாயம் அடைந்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தனமகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு பணி நடைபெற்றுள்ளது. அப்போது தொழிலாளர்கள் அங்கிருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை இந்த ஹீட்டர் மிஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தின் 70 சதவீத கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிடத்திற்குள் யாராவது இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவத்தின் போதுபக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி (35) என்பவருக்கு கற்கள் தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

வெடி விபத்து நடந்த நிறுவனத்துக்கும், சிவகாசி எம்எல்ஏ அசோகன் வீட்டிற்கும் சுமார் 200 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த பயங்கர வெடிச்சத்தம் சிவகாசி எம்எல்ஏ வீட்டில் கேட்டதால் அவர், சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து டிஎஸ்பி சுப்பையாவிடம் விபரம் கேட்டறிந்தார். தொடர்ந்து சம்பவ இடத்தை மேயர் சங்கீதா இன்பம் பார்வையிட்டார்.

சம்பவம் நடந்தபோது அருகில் உள்ள காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களுக்கு, வெடிச்சத்தம் கேட்டதால் அவர்கள் அச்சமடைந்தனர். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வெடி விபத்தில், அந்த நிறுவனத்தில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

The post சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: