வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்

சென்னை: வாக்குப்பதிவின் போது சீரான மின் விநியோகம் வழங்கவும், பிரச்னைகளை சரிசெய்ய தயார் நிலையில் இருக்கவும் மின் வாரிய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவையிலுள்ள ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நாளில் தடையின்றி மின்சாரம் வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாக்குப்பதிவு நாளில் மிந்தடை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வாக்குப்பதிவின் போது மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை மின் நிலையங்களிலும் சீரான மின்சாரம் விநியோகத்தையும், மின் அழுத்த மாறுபாடுகளையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும். வாக்குப்பதிவு மையம் மற்றும் தேர்தல் அலுவலக அதிகாரிகளிடம் செல்போன் எண்ணை அளிப்பதுடன், அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். வாக்கு மையங்களில் ஏதாவது மின் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்லும் வகையில் வாகனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் விநியோக மையம், துணை மின் நிலையங்கள், மின்தடை நீக்கும் மையம் ஆகியற்றில் தொழில்நுட்ப உபகரணங்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் மாற்றிகள், தெருவோர மின் இணைப்புப் பெட்டி போன்றவற்றிலிருந்து மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நாளில் மின் துறை ஊழியர்கள் எவரும் விடுப்பு எடுக்கக் கூடாது. வாக்களிக்கச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பணியில் இருக்க வேண்டும். அவசரமாக அழைத்தால் உடனே பணிக்கு வரும் நிலையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: