மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்குப்பதிவு நேரத்திலேயே இவிஎம் எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்து வருகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. முறைகேடு செய்வதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருந்தாலும் வாக்குப்பதிவு நாள் வரை அந்த எந்திரம் வழக்கம்போலவே செயல்படும். முறைகேடு செய்வதற்கான மென்பொருளில் நேரம் குறிப்பிட்டிருந்தால் வாக்குப்பதிவு நாளில் அதை பயன்படுத்தி தில்லு முல்லு செய்ய முடியும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்துள்ளார்.

வாதங்களை கேட்ட நீதிபதி தேர்தல் ஆணையத்திற்கு சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். முறைகேடு நடைபெற்றால் என்ன தண்டனை வழங்கப்படும். மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிசோதிப்பதற்காக வைத்திருக்க முடியுமா. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் எந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமா?, அப்படியானால் இடையில் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லையா? இவிஎம் எந்திரத்துக்கான மென்பொருள் யாரிடம் இருக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு தேர்தல் ஆணையம் வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தால் இடையில் சோதனை செய்யப்படும் என்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் எந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமில்லை என்றும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.

 

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: