அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் பாஜக விளம்பரம்: நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து குன்றத்தூர் சென்ற ஒரு வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1425 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையில், தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் ரூ.950 கோடி மதிப்பிலான 1425 கிலோ தங்கம் முறையான ஆவணங்களுடன் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த பிரிங்க்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தங்கத்தை பெரிய அளவில் வாங்கி சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. சரியான ஆவணங்கள் அவர்கள் வைத்திருந்தததால் பிடிபட்ட ரூ.950 கோடி மதிப்புள்ள 1425 கிலோ தங்கம் அந்த நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 66 ஆயிரத்து 461 பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, 40,971 மாற்று திறனாளிகளிடம் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

இந்த பணி 18ம்தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம், நகை பரிசு பொருட்கள் என 1284.46 கோடி இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிடிபட்ட ரூ.950 கோடி தங்கமும் அடங்கும். தற்போது அது திரும்பவும் ஒப்படைக்கப்பட்டது. இன்று தினசரி பத்திரிகைகளில் பாஜக சார்பில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. பொதுவாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அவர்கள் ஒரு எண் அளிப்பார்கள். அந்த எண் விளம்பரத்தின் கீழ் பிரசுரிக்க வேண்டும். ஆனால் இன்று பாஜ சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இந்த எண் இடம்பெறவில்லை. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் விசாரணை நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் பாஜக விளம்பரம்: நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: