பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ஒருவருக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர்: பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 6 மாதத்தில் போலீசார் வழக்கை விரைந்து முடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளதற்கு பொதுமக்கள் போலீசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியது. இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மீண்டும் சென்று அரிவாள் எடுத்து வந்து செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். தடுக்க வந்த செந்தில்குமாரின் தம்பி மோகன்ராஜ் மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்தது. தமிழகம் முழுவதும் இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த குட்டி (எ) ராஜ்குமார் (எ) வெங்கடேஷ் (27), அவருடைய தந்தை அய்யப்பன் (52), செல்லமுத்து (24), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (20), அய்யப்பனின் மற்றொரு மகனான வெங்கடேஷ் (எ) செல்வம் (29) ஆகிய 5 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது போலீஸ் பிடியில் இருந்து குட்டி (எ) ராஜ்குமார் (எ) வெங்கடேஷ் தப்ப முயன்றதால் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 51 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. குறுக்கு விசாரணையும் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குட்டி (எ) ராஜ்குமார் (எ) வெங்கடேஷ், அவருடைய தந்தை அய்யப்பன், செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், கொலை குற்றத்திற்கு துணையாய் இருந்த வெங்கடேஷ் (எ) செல்வத்துக்கு 2 பிரிவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை நடந்து 6 மாதத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணையை முடித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ஒருவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: