இதில் விருதுநகர் தொகுதி காங்.,வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமார், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
மக்களவை தேர்தலில் பாஜ 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 100 இடங்களில் கூட வெல்ல முடியாது. நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என ஒன்றிய அரசின் உளவுத்துறை ரகசிய அறிக்கை தந்துள்ளது. அதனால் அவர் தூக்கத்தை தொலைத்து விட்டார். ஒரு மாநில (டெல்லி) முதல்வரை மோடி அரசு கைது செய்துள்ளது.
இது அமலாக்க துறையின் நடவடிக்கை என்கிறார்கள். அந்த துறை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறையின் கீழ்தானே வருகிறது. ஏற்கனவே அம்மாநில துணை முதல்வரையும் கைது செய்து சிறை வைத்துள்ளனர். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார்? யார்? சிறைக்கு செல்ல போகிறார்கள் என்பதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.
அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடியை பாஜ பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சிதான் வழக்கு தொடர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்றத்துக்கு மிக குறைந்த நாட்கள் வந்த பிரதமர் மோடி மட்டும்தான். 19 முக்கிய சட்டங்களை எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையில் நிறைவேற்றினர்.
எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே மோடியை எதிர்க்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. மோடி மீண்டும் பிரதமரானால் அவருடன் எடப்பாடி மீண்டும் சேர மாட்டாரா? மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், பெரும் நிறுவனங்கள் பெற்ற ரூ.15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
The post உளவுத்துறை அறிக்கையால் மோடிக்கு தூக்கம் போச்சு; 100 இடங்களில் கூட பாஜ தேறாதுப்பா… கே.பாலகிருஷ்ணன் ஆருடம் appeared first on Dinakaran.