பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள எச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனி ஆறுமுகம் (51) இவர் திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி திராவிட தெலுகு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் இணைந்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் 13 இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தற்போது தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற வேட்பாளராக முனி ஆறுமுகத்திற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று 27ஆம் தேதி முனி ஆறுமுகம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு பரிசீலனைக்காக சென்றுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் இவரிடம் கரும்பு சின்னத்தை நீங்கள் வாங்கி விட்டீர்கள் உங்களது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் இவரை சில மர்ம நபர்கள் சுத்து போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த முனி ஆறுமுகம் ஓசூரை சேர்ந்த சமூக நீதி இயக்கம் தொண்டர்களுடன் இணைந்து பொலிரோ வாகனத்தில் ஓசூரை நோக்கி சென்றுள்ளார். இந்த காரில் முனி ஆறுமுகம் மற்றும் திராவிட தெலுகு தேசம் கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு பேர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் இருந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி இவர்கள் அனைவரும் காரில் வந்த போது கும்மனூர் என்ற இடத்தில் பத்து இருசக்கர வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் காரை மடக்கி காருக்குள் இருந்த முனி ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்தவர்கள் அவர்களை விளக்கி விட்டுள்ளனர். வேட்பு மனுவை திரும்பப் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த முனி ஆறுமுகம் தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய முனி ஆறுமுகம், தமிழகத்தில் 13 இடங்களில் நாங்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறோம் நாம் தமிழர் கட்சியினர்தான் தன்னை தாக்கினர். எனவே தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

The post பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: