தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 40 தொகுதிகளில் 1437 பேர் மனு தாக்கல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளில் 1437 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். நாளை மறுதினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இதன்மூலம் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதில் திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சனி, ஞாயிறு விடுமுறையை தவிர்த்து கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி திமுகவை சேர்ந்த பெரும்பாலாள வேட்பாளர் முன்னதாகவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த 25ம் தேதி ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று (27ம் தேதி) கடைசி நாள். அதன்படி நேற்று மாலை 3 மணியுடன் வேட்புனு தாக்கல் முடிந்தது. 3 மணிக்குள் வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 3 மணிக்கு பிறகும்கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன்படி திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பல்வேறு முக்கிய வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரிலும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கோவையிலும் மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 10 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் 350க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 39 தொகுதிக்கும் போட்டியிட சுமார் 1403 பேரும், புதுவையில் 34 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பிரச்னை இல்லை. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் முடிவு செய்து வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு சின்னங்களை ஒதுக்கும்.

ஒரே சின்னத்தை 2 சுயேச்சைகள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு 30ம் தேதி (நாளை மறுதினம்) மாலை சின்னம் ஒதுக்கப்படும். வேட்புமனுக்கள் மீது இன்று (28ம் தேதி) பரிசீலனை நடைபெறும். 29 மற்றும் 30ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம். 30ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் மேலும் தீவிரம் அடையும். ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 7வது கட்டமாக மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது முடிந்ததும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற ஜூன் 4ம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 40 தொகுதிகளில் 1437 பேர் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: